நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி கடந்த இரண்டு வருடங்களாக அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். சினிமாவில் அவரை ரசித்த ரசிகர்கள் தற்போது அவரின் அரசியலுக்கும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். ஒரு பக்கம் விஜய்க்கு 20 வயதுக்கு கீழே உள்ளவர்கள்தான் ரசிகர்களாக இருப்பார்கள்.. அவரின் ரசிகர்கள் பலரும் 18 வயது கீழே.. அவர்களுக்கு ஓட்டே இல்லை என்று நக்கலடித்தவர்கள் கூட விஜய் அரசியலுக்கு வந்தபின் அவருக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து தங்கள் முடிவை மாற்றியிருக்கிறார்கள்.
ஏனெனில் சிறியவர் முதல் பெரியவர் வரை விஜயை வரவேற்கிறார்கள்.. அவருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.. ஒரு மாற்றம் வரவேண்டும்.. எங்களின் ஓட்டு விஜய்க்குதான் என தொலைக்காட்சி பேட்டிகளில் தைரியமாக சொல்கிறார்கள். இது ஆளும் திமுக அரசையே அசைத்து பார்த்திருக்கிறது. அதனால்தான் விஜய் விஷயத்தில் அவர்கள் அதிக கெடுபிடி காட்டாமல் அமைதி காத்து வருகிறார்கள்.
விஜயின் ஜனநாயகம் திரைப்படம் கூட நேற்று வெளியாகவிருந்தது. ஆனால் சென்சார் சென்சார் பிரச்சினையில் சிக்கியதால் அந்த படம் வெளியாகவில்லை. இதற்கு பின்னணியில் மத்தியில் ஆளும் பாஜக இருப்பதாக விஜய் ரசிகர்கள் குற்றம் சொல்லி வருகிறார்கள். காங்கிரஸ் கூட இந்த விஷயத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பாஜக விஜயை பழி வாங்குகிறது என கருத்து தெரிவித்தது.
இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அரசியல் என்பது ஒரு படத்தின் மூலமாக தீர்மானிக்கப்படுவது அல்ல.. புதுசா ஒருத்தருக்கு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என பிங்கி பாக்கி போட்டு பார்க்கும் தேர்தல் அல்ல இந்த தேர்தல்.. திமுகவை அகற்ற வேண்டும் என முடிவு செய்த பிறகு ஆட்சியில் யார் வந்து அமர்ந்தால் அவர்களால் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என விஜயை மறைமுகமாக சுட்டிக்காடி பேசியிருக்கிறார்.