தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் அரசியல் நகர்வுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை எந்த கூட்டணியிலும் அதிகாரப்பூர்வமாக இணையாமல் இருந்த தேமுதிக, தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
தொடக்கத்தில் 30 தொகுதிகள் வரை தேமுதிக தரப்பில் கோரப்பட்டாலும், நீண்டகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்க அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "ஆட்சி அமைக்க தேவையான எந்தவொரு வாய்ப்பையும் நாங்கள் தவறவிட மாட்டோம்" என்று குறிப்பிட்டது தேமுதிகவை நோக்கிய சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
இரண்டாம் கட்டத் தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் முன்னிலையில் அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் தேமுதிக அதிகாரப்பூர்வமாக அங்கம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.