அரசியல்வாதிகள் அவ்வப்போது மேடைகளில் எதையாவது பேசி உளறி சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. சில சமயம் ஓவராக பேசி அது சர்ச்சையாக மாறி மன்னிப்பு கேட்கும் வரை செல்லும். எதிர்ப்பு அதிகமாக இருந்தால் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் என ஒரு டெம்ப்ளேட் வைத்திருக்கிறார்கள். அதேநேரம், சில சமயம் கைது நடவடிக்கை கூட நடைபெறும். அப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசுசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதிமுக பூத் கமிட்டி பயிற்சி கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம் தேர்தல் வருகிறது பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, இலவசமாக கிரைண்டர், ஆடு, மாடு அவ்வளவு ஏன்?.. ஆளுக்கு ஒரு மனைவி கூட இலவசமாக கொடுப்பார்கள்.. நீங்கள் அதில் மயங்கி விடக்கூடாது என்று பேசியிருந்தார்.
திமுக அரசின் இலவச திட்டங்களோடு பெண்களை தொடர்புபடுத்தி அருவருக்கத்தக்க வகையில் சிவி சண்முகம் பேசிவிட்டார் என பலரும் பொங்கினார்கள். குறிப்பாக பெண் அரசியல் பிரபலங்கள் சண்முகத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இந்த விவகாரத்தை மாநில மகளிர் ஆணையமும் கையில் எடுத்தது. இதுபற்றி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சிவி சண்முகத்திற்கு இரண்டு முறை சமன் அனுப்பியும் அவர் அங்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் சிவி சண்முகம் மீது நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபிக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பி இருக்கிறது. எனவே விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.