Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களுக்கு ஒரு அறை இருந்தது

-சமயவேல்

எங்களுக்கு ஒரு அறை இருந்தது
, வெள்ளி, 6 ஜூன் 2008 (11:31 IST)
கால‌ம் (ஆக‌ஸ்‌ட் 1991) எ‌ன்ற ‌சி‌ற்‌றித‌ழி‌ல் வெ‌ளிவ‌ந்த க‌விதையை த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் வாசக‌ர்களு‌க்காக இ‌ங்கு கொடு‌த்து‌ள்ளோ‌ம்.

ஆசிரமம் தெருவில்
எங்களுக்கு ஒரு அறை இருந்தது
நகரத்தில் எதனிடமும் ஒட்டுப்பட முடியாமல்
கூரைகளுக்கு மேல் மிதந்த
மிகச் சிறிய அறை அது.

சார்மினார் கோல்டுபிளேக் வில்ஸ் பில்டர்
செய்யது பீடிப் புகைகளூடே
விதம் விதமாய் உரையாடும் முகங்கள்
பேச்சுகள் பகிர்வுகள் விவாதங்கள்
துண்டன் துண்டமாய் வெட்டி அலசினோம்
வாழ்க்கையை

சமயத்தில் அறை நகர்ந்து
காந்தி மைதானத்தில் கூடும்
புற நகர்ச் சாலை பாலச் சுவர்
அல்லது மேடேறிக் கதிரேசன் மலை சேரும்
எங்கும் பேச்சுத்தான்

வாழ்வின் விசாரத்தை எப்பவும்
கூடவே இழுத்துக் கொண்டு
அலைந்தது எங்கள் அறை

உலகைச் சீரமைப்பதற்கான கருவிகளை
ஏராளமாய் உற்பத்தி செய்து (தலைகளில்)
அறை முழுவதும் தொங்க விட்டோம்

எது குறித்தும் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்காமல்
அறைச் சுவர்கள் பிரியமுடன் கொடுத்த
சுதந்திரத்தை எல்லோரும் தின்று வந்தோம்

எங்கோ சாப்பிட்டோம்
எப்போதோ தூங்கினோம்
எல்லா இடங்களிலும் டீ குடித்தோம்
அவன் காசு கொடுத்தான்
இவன் சிகரெட் வாங்கினான்
சதா புகைப் பிடித்தோம்
இளந்தாடியுடனும், குறுஞ்சிரிப்புடனும்
ஒருவன் பாட்டில்கள் கொண்டு வந்தான்
இட்லிகளும் புரோட்டாக்களும்
பார்சலில் வந்தன
விதமான போதையில்
எல்லாவற்றையும் மிகத் தெளிவாக
விளங்கிக் கொண்டோம்

அறைக்காற்றில்
எங்கள் பெருமூச்சுகளையும்
ஆத்மாக்களையும் கலந்தோம்

நண்பர்கள் கூடக்கூட
அறை அகன்று விரிந்தது
ஒருவர் பாயில் மூவர் தரையில்
இருவர் சேரில்
படியில் இருவர் நியூஸ் பேப்பரில் ஒருவர் என
தாறுமாறாய் படுத்து
நிம்மதியாகத் தூங்கினோம்

அறையை விட்டுக் கிளம்பி
குடும்பம் கட்டியிருக்கும் நாங்கள்
வீட்டையும் அறையையும் இணைக்க முடியாமல்
திணறிக் கொண்டிருக்கிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil