டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கான அபராதங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், இந்த நடைமுறை தமிழ்நாட்டுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் போக்குவரத்து காவல்துறையினர், சீட் பெல்ட் அணியாதது, ஹெல்மெட் அணியாதது, அதிவேகம், சிக்னல் விதிகளை மீறுவது மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உட்பட 13 வகையான சிறு விதிமீறல்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளனர்.
இந்த தள்ளுபடி, தேசிய லோக் அதாலத் மூலம் வரும் 13-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும், அபராதத்தை முழுமையாகவோ அல்லது 50% வரை குறைக்கவோ வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை குறித்து தமிழக அரசு வட்டாரங்களில் கேட்டபோது, "தமிழ்நாட்டில் இப்போதைக்கு இது போன்ற அபராத தள்ளுபடி நடைமுறைகள் வரவில்லை. இது தொடர்பான எந்த ஆலோசனைகளும் நடைபெறவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி அபராதம் செலுத்துவதிலிருந்து தப்பிக்க வேண்டும்.