லக்னோவின் சவுதரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த நிதி நிர்வாகியான அனூப் குமார் பாண்டே என்பவர், தனது விமானத்தை பிடிக்க வேண்டும் என்ற பதற்றத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். நண்பரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பிறகு, லக்னோ - டெல்லி - பெங்களூரு இணைப்பு விமானத்தில் திரும்புவதற்காக அவர் விமான நிலையம் வந்திருந்தார்.
கான்பூரிலிருந்து விமான நிலையத்திற்கு பயணம் செய்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பாண்டே, விமானம் தவறிவிடுமோ என்ற பயத்தில் அவசரமாக ஓடியபோது, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வாகன நிறுத்துமிடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
இண்டிகோ விமான நிறுவனத்தின் தொடர் ரத்து காரணமாக விமான நிலையங்களில் கடுமையான நெரிசல் நிலவும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
விமான சேவை குழப்பங்களால் டிசம்பர் 1 முதல் 7 வரையிலான காலகட்டத்தில் சுமார் 5.86 லட்சம் பயணச் சீட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், பயணிகளுக்கு ரூ.569 கோடி திரும்ப வழங்கப்பட்டுள்ளது என்றும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.