பெங்களூருவின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கைதிகளுக்கு விஐபி வசதிகள் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பது பற்றிய அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியான நிலையில், கர்நாடக அரசு மூத்த சிறை அதிகாரிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளது.
சிறை கண்காணிப்பாளர் மாஹெகெரி மற்றும் சிறை உதவி கண்காணிப்பாளர் அசோக் பஜந்த்ரி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை சிறை கண்காணிப்பாளர் சுரேஷ் மாற்றப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள், தொடர் பாலியல் குற்றவாளி உமேஷ் ரெட்டி, நடிகர் தருண் உள்ளிட்ட உயர் பாதுகாப்புக் கைதிகள், மொபைல் போன் பயன்படுத்துதல், ஸ்மார்ட் டிவி பார்த்தல் மற்றும் சிறப்பு வசதிகளை அனுபவித்தல் போன்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. மற்றொரு வீடியோவில் கைதிகள் "இரவு முழுவதும் பார்ட்டி" என கூச்சலிட்டு நடனமாடியதும் பதிவாகியுள்ளது.
"இதை அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இது சிறையா அல்லது பார்ட்டி ஹாலா? என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா கண்டனம் தெரிவித்தார். பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது அரசியல் ரீதியான நடவடிக்கை அல்ல என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.