குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு நகைக்கடைக்குள் கொள்ளையடிக்கும் நோக்குடன் நுழைந்த பெண், கடை உரிமையாளரின் தாக்குதலால் நிலைகுலைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நவம்பர் 3 அன்று மதியம் நடந்த இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகி வைரலாகி வருகிறது. துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு வாடிக்கையாளராக வந்த அந்த பெண், திடீரென கடை உரிமையாளர் கண்களில் மிளகாய் பொடியைத் தூவினார். ஆனால், பொடி கண்ணில் படாமல் போகவே, சுதாரித்துக்கொண்ட உரிமையாளர் உடனடியாக எழுந்து, அந்த பெண்ணை 25 வினாடிகளில் சுமார் 20 முறை விடாமல் அறைந்தார்.
அறைந்தபடியே அந்த பெண்ணை கவுண்டருக்கு வெளியே இழுத்து சென்ற உரிமையாளர், அவரை அங்கிருந்து வெளியேற்றினார். இந்த சம்பவம் குறித்து கடை உரிமையாளர் புகார் அளிக்க மறுத்த போதிலும், அகமதாபாத் காவல் துறை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை முயற்சி செய்த பெண்ணை தேடும் விசாரணையை தொடங்கியுள்ளது.