Publish Date: Wed, 18 Feb 2026 (09:24 IST)
Updated Date: Wed, 18 Feb 2026 (09:27 IST)
டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ரீல்ஸ் எடுப்பதற்காக, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்ட 22 வயது வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
காஜூரி காஸ் பகுதியை சேர்ந்த துஷார் புனியா என்ற வாலிபர், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் தனது பைக்கில் அதிவேகமாக சென்று, ஓடிக்கொண்டிருந்த பேருந்து மற்றும் இதர வாகனங்களின் கதவுகளை திடீரென திறந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, நியூ உஸ்மான்பூர் போலீஸார் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். சோதனையின் போது, அவர் தனது அடையாளத்தை மறைப்பதற்காக பைக்கின் நம்பர் பிளேட்டை அகற்றியிருந்தது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் அவரை தேடி பிடித்த போலீஸார், சாகசத்திற்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர். "ரீல்ஸ் புகழுக்காக தனது உயிரையும் மற்றவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கும் இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை" என போலீஸார் எச்சரித்துள்ளனர்.