டெல்லியில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், முக்கிய சந்தேக நபரான முஸம்மில் என்பவர் விசாரணையாளர்களிடம் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு முன்னரே, தானும் தனது கூட்டாளி உமர் என்பவரும் செங்கோட்டை பகுதியை நோட்டமிட்டதாக முஸம்மில் தெரிவித்துள்ளார்.
முஸம்மில் அளித்த தகவலின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 26 அன்று தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகவே செங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தாங்கள் நோட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த தீபாவளிக்கு மக்கள் அதிகம் கூடும் இடத்தில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் அதனை செயல்படுத்த முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஃபரிதாபாத் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் முஸம்மிலின் சக ஊழியரான உமர், கார் வெடித்தபோது உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வாக்குமூலம் கிடைத்ததையடுத்து, பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.