அமேசான் நிறுவனம், அதன் மனிதவள பிரிவில் 15 சதவீதம் வரையிலான ஊழியர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைமைச் செயல் அதிகாரி ஆண்டி ஜஸ்ஸி, நிறுவனத்தின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஏஐ-யில் அமேசான் பில்லியன் டாலர்களை முதலீடு செய்து வரும் நிலையில், ஏஐ பயன்பாட்டினால் கிடைக்கும் திறன் லாபங்கள், ஒட்டுமொத்ப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று அவர் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது ஜஸ்ஸியின் தலைமையில் நடக்கும் இரண்டாவது பெரிய பணிநீக்க அலையாகும். முந்தைய பணிநீக்கங்கள் பெருந்தொற்றுக்கு பிந்தைய அதீத விரிவாக்கத்தால் நிகழ்ந்த நிலையில், இப்போதைய நடவடிக்கை ஏஐ-யால் இயக்கப்படும் செயல்பாடுகளை நோக்கிய மாற்றத்துடன் தொடர்புடையது.
ஒருபுறம் பெருநிறுவன பணியாளர்களை நீக்கத் தயாராகும் அமேசான், மறுபுறம் பண்டிகைக் கால தேவையைச் சமாளிக்க 2,50,000 தற்காலிக பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.