திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கண்டன தீர்மானம் கொண்டு வந்ததற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகள், இந்த நடவடிக்கையை அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்காத நீதிபதிகளை மிரட்டி பணியவைக்கும் முயற்சி என்று சாடியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என்றும், ஜனநாயக விரோதமானது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கண்டனத் தீர்மானம் என்பது நீதித்துறை ஒருமைப்பாட்டை காக்கவே தவிர, பழிவாங்குவதற்கான கருவி அல்ல என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
முன்னாள் நீதிபதிகள் மேலும் கூறுகையில், சில அரசியல் நலன்களுக்கு எதிராக தீர்ப்புகள் வரும்போதெல்லாம், மூத்த நீதிபதிகளான தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட் மற்றும் தற்போதைய இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த் போன்றவர்களை அவமதிக்கும் முயற்சிகளை எதிர்த்தும் அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
நீதிபதிகளை அரசியல் இணக்கத்துக்குத் தள்ள இதை பயன்படுத்துவது, ஒரு அரசியலமைப்பு பாதுகாப்பை "அச்சுறுத்தலின் கருவியாக" மாற்றுவதாகவும், இது "ஜனநாயக விரோதமானது" என்றும் "அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.