தெலங்கானாவில் உள்ள ஒரு ஹோட்டல் தொழிலாளியின் 10 மாத குழந்தைக்கு, அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் ரூ.16 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக கிடைத்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமபிரம்மம் என்பவர், யாததிரி புவனிகிரி பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டை விற்க கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்சி செய்தும் தோல்வியடைந்த நிலையில், அந்த வீட்டை ஒரு குலுக்கல் பரிசாக விற்க முடிவு செய்தார். ஒரு சீட்டின் விலை ரூ.500 என நிர்ணயித்து அவர் விளம்பரப்படுத்தியுள்ளார்.
சங்கர் என்ற ஹோட்டல் தொழிலாளி, தனது குடும்ப உறுப்பினர்களான மனைவி, மகள்கள் சாய் ரிஷிகா மற்றும் 10 மாத குழந்தை ஹன்சிகா உட்பட, மொத்தம் 4 சீட்டுகளை வாங்கியிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, சிறிய குழந்தை ஹன்சிகாவின் பெயரில் பரிசு விழுந்தது உறுதியானது. இதன் விளைவாக, ரூ.16 லட்சம் மதிப்பிலான வீடு சங்கர் குடும்பத்திற்கு சொந்தமானது.
சுமார் 3,600 பேர் இந்த ரூ.500 சீட்டுகளை வாங்கியதால், வீட்டின் உரிமையாளரான ராமபிரம்மத்துக்கும் ரூ.18 லட்சம் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது, சிறு தொகையிலான முதலீட்டின் மூலம் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்த ஒரு சுவாரசியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.