Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”பாரதிராஜாவின் தாய் என்னைப் பெறாமல் பெற்றவர்” - இசைஞானி இளையராஜா

”பாரதிராஜாவின் தாய் என்னைப் பெறாமல் பெற்றவர்” - இசைஞானி இளையராஜா
, ஞாயிறு, 5 ஜூன் 2016 (16:37 IST)
பாரதிராஜாவின் தாயாரை, ’என்னைப் பெறாமல் பெற்ற தாய் அவர்’ என்று இசைஞானி இளையராஜா கூறியிருந்தார்.
 

 
இதுபற்றி இளையராஜா ஒருமுறை கூறும்போது, ”வேலை பார்ப்பதற்காக, பண்ணைபுரத்துக்கு பாரதி வந்தது 1961ஆம் வருடம். அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை. அதனால், அந்த நாட்களில் சொந்த ஊரான அல்லிநகரத்துக்குப் போய் விடுவார். ஒரு முறை, என்னையும், பாஸ்கரையும் கூட அழைத்துப்போனார்.
 
பாரதியின் அம்மா, சகோதரிகள் பாலாமணி, பாரதி, சகோதரர் செல்லக்கண்ணு, ஜெயராஜ், இன்னும் மூத்த சகோதரர், அப்பா பெரிய மாயத்தேவர் எல்லோரும் நன்றாகப் பழக்கமாகிவிட்டார்கள்.
 
முதல் சந்திப்பிலேயே, பாரதியின் அம்மா, 'வாங்கப்பா! நீங்கதானா அது?' என்று மிகவும் அன்புடன் பேசினார்கள்.
 
என் அம்மாவும் இப்படித்தான். யாரையாவது அழைத்துப்போய், அம்மாவிடம் அறிமுகப்படுத்தினால், 'வாப்பா! சவுக்கியமா? ஏம்பா இவ்வளவு நாள் இந்தப் பக்கம் வரலே?' என்று கேட்பார்கள்! இரண்டு தாய்களும், எங்களுக்கு ஒரே தாய்தான்.
 
ஒருமுறை தீபாவளிக்கு நானும், பாரதியும் அல்லிநகரம் போய்விட்டோம். இரவெல்லாம் பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினோம்.
 
பிறகு தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்தால், வெந்நீரும், சோப்பும், சீயக்காயும், துண்டும் தயாராக இருந்தன. 'வாங்கப்பா! சீக்கிரம் எண்ணை தெய்த்து குளிச்சிட்டு ரெடியாகுங்க' என்றார், பாரதியின் அம்மா.
 
'எதுக்கு?' என்று நாங்கள் கேட்க, 'சாப்பிட வேணாமா? பின்னே என்ன தீபாவளி?' என்று கூறிவிட்டு, பாரதிக்கு எண்ணை தேய்த்து விட்டார்கள்.
 
நானும் எண்ணை எடுத்து தேய்த்துக்கொண்டேன். 'நல்லா இருக்கு நீ எண்ணை தேய்க்கிற லட்சணம்!' என்று கூறிவிட்டு, எண்ணை கிண்ணத்தை வாங்கிக் கொண்டார்கள். என் முதுகில், எண்ணை படாமலிருந்த இடங்களில் எல்லாம் எண்ணை தேய்த்துவிட்டார்கள்.
 
பிறகு, பாரதியின் தலையில் நன்றாக சீயக்காய் போட்டுத் தேய்த்ததுடன், சோப்பு போட்டு தேய்த்து, தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினார்கள்.
 
நான் குளிப்பதற்கு சொம்பில் தண்ணீர் எடுத்தேன். 'போதும். இங்கே கொண்டா!' என்று வலுக்கட்டாயமாக சொம்பை வாங்கி, எனக்கும் சீயக்காய் தேய்த்து, குளிப்பாட்டினார்கள்! வீட்டுக்கு வந்த மகனின் நண்பனுக்கு, எந்த ஊரில் எந்தத்தாய் இப்படி செய்திருப்பார்கள்!
 
பிறகு சாப்பாடு. சாதாரணமாக மூன்று நாலு இட்லி, ஒரு தோசை, காபியுடன் கதை முடிந்து விடும். ஆனால் எங்களுக்கு 6 இட்லி, 6 பனியாரம், 6 தோசை இவற்றுடன், சட்னி, சாம்பார், மிளகாய் சட்னி ஆறாக ஓடியது!
 
ஒரே ஒரு தீபாவளிக்கு இப்படி நடந்தது என்றால் பரவாயில்லை. எத்தனை தீபாவளிகளுக்கு நான் அல்லிநகரத்துக்கு போனேனோ, அப்போதெல்லாம் இப்படி நடந்தது.
 
பெரிய மாயத்தேவர், காந்தீயத்தில் பற்று மிக்கவர் என்பதை அவருடைய கதர் வேட்டியும், சட்டையும் எடுத்துக்காட்டின. சகோதரி பாலா, பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்தார். பாரதி - இந்தத் தங்கையின் பெயரைத்தான் தன் பெயராக மாற்றிக்கொண்டார், பாரதிராஜா. (இயற்பெயர் சின்னச்சாமி)
 
பின்னால் நான் இசையமைப்பாளனாக ஆன பிறகு, பண்ணைப்புரம் போகும்போதோ, அம்மாவின் சமாதிக்கு போகும்போதோ, அல்லிநகரத்திலும், தேனியிலும் காரை நிறுத்தி, அம்மாவைப் பார்க்காமல் போனதே இல்லை. வெறும் கையுடன் போகமாட்டேன். ஒவ்வொரு முறையும், 4 புடவையும், பணமும் கொடுத்து அந்தத் தாயை வணங்குவேன்.
 
என்னைப் பெறாமல் பெற்ற தாய் அவர்” என்றார்.

தகவல் உதவி : 
Jeyapal Bala

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பரோட்டா சூரி உண்மையில் எத்தனை பரோட்டா சாப்பிட்டார்?