ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்ட போது முதல் சீசனில் கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். ஆனால் அதன் பிறகு 17 ஆண்டுகளாக அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அந்த அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று சஞ்சு சாம்சன் வழிநடத்தினாலும் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார். மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு சஞ்சுவைக் கொடுத்துவிட்டு வேறு வீரரை டிரேட் செய்ய ராஜஸ்தான் முயல்வதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த அணிக்குப் புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் என தெரிகிறது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது துருவ் ஜுரெல் ஆகிய இருவரில் ஒருவருக்குக் கேப்டன் பொறுப்புக் கொடுக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.