பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடனை, திரும்ப பெற ஏஆர்சி என்ர தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்துள்ளது.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் இந்த செயல்முறையை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின்வருமாறு...
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, மாணவர்களுக்கு வழங்கியுள்ள கல்விக்கடன், விவசாயிகளுக்கு அளித்துள்ள வேளாண் கடன், சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்களை வசூலிக்க ஏஆர்சி என்ற தனியார் நிறுவனத்தை முகவராக நியமித்து இருக்கிறது.
ஏஆர்சி முகவர்கள் மொத்தக் கடனை வசூலித்து அதில் 15 விழுக்காடு மட்டுமே வங்கிக்கு செலுத்தினால் போதுமானது. மீதி கடன் தொகையை முகவர்கள் தங்கள் சேவைக்கான தொகையாக வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் முகவர்கள் குண்டர்களாக மாறி, கடன் பெற்றுள்ள மாணவர்களையும், விவசாயிகளையும், வர்த்தகர்களையும் மிரட்டும் கொடுமை நடக்கிறது. மத்திய அரசு ஈவு இரக்கமற்ற ஈட்டிக்காரனாக மாறிவருகிறது.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கியின் குண்டர்கள் கூலிப்படையை போல, கடன் வசூலிக்கும் இந்த அராஜகம் ஜனநாயக நாட்டில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. எனவே சாதாரண எளிய மக்களிடமிருந்து கந்துவட்டிக் கும்பலைப் போன்று கடன் வசூலிக்க முகவர்களை ஏவி விடுவதை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி உடனடியாக கைவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.