முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது.
இன்று காலை 6.30 மணி முதல் பூஜை தொடங்கவுள்ளதாகவும், அடிக்கல் நாட்டு விழா காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிட டிசைன் வெளியாகியுள்ளது. இந்த நினைவிடம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் வடிவமைக்கப்படவுள்ளது. இறந்தாலும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் பறவை போல் ஜெயலலிதா மறைந்தாலும் அதிமுகவின் வழிகாட்டியாக இருப்பதை குறிக்கும் வகையில் பீனிக்ஸ் பறவை டிசைனில் இந்த நினைவு மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்று அடிக்கல்நாட்டு விழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.